2026ஆம் ஆண்டில் பெரும்பாலான கன்டோன்கள் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன
சுவிட்சர்லாந்தின் பல கன்டோன்கள் 2026ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையுடன் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கன்டோன்களின் முக்கியமான செலவுத் துறைகள் கல்வி, சமூக நலன் மற்றும் சுகாதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று துறைகளில் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதால், வருவாயுடன் ஒப்பிடும்போது நிதிசுமை பெரிதாகி வருகிறது என கன்டோனல் நிதி இயக்குநர்கள் மாநாட்டின் தலைவர் எர்ன்ஸ்ட் ஸ்டோக்கர் தெரிவித்துள்ளார்.
சில கன்டோன்களில் கடந்த ஆண்டுகளில் கல்வி மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உயர்ந்துள்ளன. இதனால், வரி வருவாய் வளர்ச்சி இருந்தாலும் மொத்த செலவுகள் அதை விட அதிகமாகியுள்ளன.

நிதி நிலைமையில் தற்போது மிகுந்த வலிமையுடன் உள்ள சூக் (Zug) கன்டோன் 370 மில்லியன் ஃப்ராங்க் வருவாய் அதிகப்படியுடன் முன்னிலையில் உள்ளது. இதற்கு மாறாக, ஜெனீவா கன்டோன் 409.4 மில்லியன் ஃப்ராங்க் பற்றாக்குறையுடன் கடுமையான நிதி அழுத்தத்தை சந்தித்து வருகிறது.
நிதி நிபுணர்கள் கூறுவதாவது, இவ்வாறான பற்றாக்குறைகள் பொதுமக்கள் வாழ்க்கையிலும் நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடும். பொதுச் சேவைகள், சமூக உதவித்திட்டங்கள் மற்றும் சில அடிப்படை வசதிகளுக்கான செலவுகள் குறைக்கப்பட வாய்ப்பு உண்டு.
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தாலும், மக்கள்தொகை வளர்ச்சி, சுகாதாரச் செலவுகள், மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் அதிகரிப்பு ஆகியவை பல கன்டோன்களின் நிதி சமநிலையை சீர்குலைக்கும் நிலையில் உள்ளன. வரவிருக்கும் ஆண்டுகளில் பல கன்டோன்கள் தங்களின் செலவுத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
© KeystoneSDA