காய்ச்சல் (Influenza), கொவிட்-19, மற்றும் சுவாச சின்சிட்டியல் வைரஸ் (RSV) போன்ற சுவாச நோய்களினால் கூடுதலாக பாதிப்பு ஏற்படக்கூடிய மக்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து சுகாதார அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி வாரம் வரும் நவம்பர் 10 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
சுகாதார அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “காய்ச்சல், கொவிட்-19 மற்றும் RSV போன்ற நோய்கள் பொதுவாக சாதாரண சளி அறிகுறிகளுடன் தொடங்கினாலும், அவை சில சமயங்களில் கடுமையான நிலைக்கு மாறக்கூடும்.
எனவே, ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிப் பெண்கள், நெடுநாள் நோய்களுடன் வாழ்பவர்கள், 6 மாதம் முதல் 2 வயது வரை பிறந்த குழந்தைகள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் காய்ச்சல் பரவும் காலம் தொடங்குவதற்கு முன், அதாவது டிசம்பர் மாத நடுப்பகுதிக்கு முன், தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பல முறை பாதித்தவர்களிடமும் இன்னும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, மூத்தோர், கர்ப்பிணிப் பெண்கள், முன்பே நோய்களைக் கொண்டவர்கள் மற்றும் டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
RSV வைரஸ், புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் கடுமையான சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடியது.
அதனால், கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் அல்லது குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 75 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நெடுநாள் நோய்களுடன் இருப்பவர்கள் கூட இந்த தடுப்பூசியை பெறுவது சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, சுவிட்சர்லாந்து வழக்கமான “காய்ச்சல் தடுப்பூசி தினம்” என்பதற்குப் பதிலாக தேசிய தடுப்பூசி வாரம் நடத்துகிறது. இதில் மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் வழியாக ஆலோசனையும் தடுப்பூசியும் வழங்கப்படும்.