சுவிட்சர்லாந்தில் “அகிரா (Akira)” எனப்படும் ஹேக்கர் குழு இணையத் தாக்குதல்களை (Ransomware Attacks) தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 200 நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்ட சேதம் சில மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் என்றும், உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹேக்கர் குழுவுக்கு எதிராக 2024 ஏப்ரல் மாதம் முதல் குற்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை, சுவிஸ் மத்திய காவல்துறை (Fedpol) மற்றும் சைபர் பாதுகாப்பு அலுவலகம், மேலும் பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த “அகிரா” ஹேக்கர் குழு முதன்முதலாக 2023 மார்ச் மாதம் தோன்றியது. இக்குழுவினர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வர்கள் மற்றும் தனிப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தி செயல்படுகின்றனர்.
அவர்கள் பயன்படுத்தும் முறை “Double Extortion” எனப்படுகிறது — இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை திருடி, பின்னர் அதே தரவுகளை குறியாக்கம் (என்கிறிப்ட்) செய்து பூட்டுகின்றனர்.
Cyber attack in process with hacker using laptop. Computer and digital security icons in cells. Hacking and malware concept.
பாதிக்கப்பட்டவர்கள் கேட்கப்பட்ட பணத்தை (Ransom) குறிப்பிட்ட காலக்கெடு உள்பட செலுத்தாவிட்டால், ஹேக்கர்கள் அந்த தரவுகளை “DLS (Data Leak Site)” எனும் டார்க்நெட் வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் கிரிப்டோகரன்சியிலான பிட்ட்காயின் (Bitcoin) வழியாகவே பணம் பெறுகின்றனர். அதிகாரிகள் கூறுவதாவது, பல நிறுவனங்கள் தங்களது பெயர்ப் புகழுக்கு சேதம் ஏற்படும் என்ற பயத்தால் பணத்தைச் செலுத்தி விடுகின்றன; இதனால், பல தாக்குதல்கள் அதிகாரிகளிடம் புகாராக பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன.
சுவிட்சர்லாந்து வழக்கறிஞர் அலுவலகம், கூட்டாட்சி காவல்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில்,
“பணத்தை செலுத்துவது குற்றக்குழுவின் நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும். அதற்கு பதிலாக புகார் அளிப்பதே சரியான வழி” என்று எச்சரித்துள்ளனர்.