சூரிச் விமான நிலையத்தில் 530 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்
சூரிக் மாநில காவல்துறை, சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகத்துடன் (BAZG) இணைந்து நடத்திய நடவடிக்கையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சூரிக் விமான நிலையத்தில் 530 கிலோகிராமுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 13 நாடுகளைச் சேர்ந்த 21 ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சூரிக் விமான நிலையத்தை இடைநிலையமாக (டிரான்சிட்) பயன்படுத்தியிருந்தனர், மற்றவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அதைப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் 437 கிலோ மரிஹுவானா, 42 கிலோ காத் (Khat), 24 கிலோ கோக்கைன், 19 கிலோ ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராமுக்கும் மேற்பட்ட (Ayahuasca)“அயஹுவாஸ்கா” எனப்படும் தாவர அடிப்படையிலான மயக்கப் பொருள் அடங்கும்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 67 வயதுக்குட்பட்ட ஆறு பெண்கள் மற்றும் 15 ஆண்கள் எனவும், அவர்கள் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் பெரும்பாலும் பயணப் பைகளில் மறைத்து கடத்தப்பட்டிருந்தன. அதேசமயம், ஒருவர் தனது உடலின் குடல் பாதையில் “பிங்கர்லிங்ஸ்” (சிறிய குழாய்கள்) வடிவில் கோக்கைனை எடுத்துச் சென்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சூரிக் விமான நிலையம் வழியாக போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் அடிக்கடி நடைபெறுவதால், அதிகாரிகள் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர். அவர்கள் சர்வதேச அளவில் மற்ற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து கடத்தல் வலையமைப்புகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
© KAPO Zürich