க்ராய்ஸ்லிங்கன் (Kreuzlingen) நகரில் ஆயுதத்துடன் பதுங்கிய நபர் கைது: சிறப்பு போலீஸ் நடவடிக்கை
துர்காவ் கன்டோனில் உள்ள க்ராய்ஸ்லிங்கன் (Kreuzlingen, Thurgau) நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில், ஆயுதத்துடன் தனது குடியிருப்பில் பதுங்கியிருந்த 40 வயதுடைய நபரை துர்காவ் கன்டோனல் போலீசார் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் கைது செய்துள்ளனர்.
தகவலின்படி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காலை தனது குடியிருப்பு கட்டிடத்தின் முன்பாக கடும் சத்தம் செய்து சேதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் ஒருவரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் தனது வீட்டுக்குள் சென்று ஆயுதத்துடன் உள்ளே பதுங்கிக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை குறித்து தகவல் கிடைத்ததும் துர்காவ் கன்டோனல் போலீசார் உடனடியாக சிறப்பு போலீஸ் படையினரை சம்பவ இடத்துக்கு அனுப்பினர். ஆயுதத்துடன் இருந்ததால் பாதுகாப்பு காரணங்களால் பெரிய அளவிலான போலீஸ் படை க்ராய்ஸ்லிங்கன் நகரில் திரளாக அனுப்பப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த கட்டிடத்திற்கு முன்பாக உள்ள வீதியும் போலீசாரால் முழுமையாக மூடப்பட்டது.

பல மணி நேரங்கள் நீடித்த போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு, சிறப்பு படையினர் அந்த நபரை அவரது வீட்டுக்குள் இருந்தபடியே கைது செய்ய முடிந்தது. இந்த நடவடிக்கையின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அந்த நபர் இருந்த வீட்டுக்குள் தீ ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவலும் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு தீயணைப்பு வீரர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக துர்காவ் கன்டோனல் போலீசாரின் பேச்சாளர் மாத்தியாஸ் கிராப் (Matthias Graf) தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக துர்காவ் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார், அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதம் என்ன, சம்பவத்திற்கு பின்னால் உள்ள சூழ்நிலைகள் என்ன என்பவை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
© Kapo TG