சீலிஸ்பெர்க் சுரங்கப் பாதையில் பராமரிப்பு பணிகள் தொடங்குகின்றன
45 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள சீலிஸ்பெர்க் சாலைச் சுரங்கத்தின் முழுமையான மறுசீரமைப்புக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் தேசிய சாலை அலுவலகம் (ASTRA) வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தப் பணிகளில் முக்கியமானதாக 1980 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பழைய தீயணைப்பு நீர்வழி அமைப்பு (firefighting water system) முழுமையாக மாற்றப்பட உள்ளது. அதேபோல சுரங்கத்திற்குள் உள்ள வானொலி தொடர்பு (tunnel radio system) வசதிகளும் புதுப்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் DAB+ சிக்னல் பெறுதல் மேம்படுவதோடு, பாதுகாப்பு தொடர்பு வலையமைப்பும் வலுவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிகள் நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு சுரங்கப் பாதை மூடப்படும். அதனால், வாகனங்கள் மாறி மாறி ஒரே வழிப் பாதையில் இருதிசை போக்குவரத்தாக அனுமதிக்கப்படும். அக்டோபர் 12 முதல் நவம்பர் 14 வரை தெற்கு மற்றும் வடக்கு சுரங்கங்கள் மாறி மாறி மூடப்படும். இந்நாட்களில் தினமும் இரவு 7.30 மணி முதல் காலை 5.00 மணி வரை சுரங்கப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.

சீலிஸ்பெர்க் சுரங்கம் நிட்வால்டன் மற்றும் ஊரி எனும் சுவிட்சர்லாந்தின் இரண்டு கண்டோன்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாதையாகும். இதன் நீளம் சுமார் 9.3 கிலோமீட்டர். ASTRA-வின் தகவலின்படி, இந்த சுரங்கம் தினசரி சுமார் 20,000 வாகனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் முக்கியமான ஆல்ப்ஸ் வழிப் பாதைகளில் ஒன்றான இந்த சுரங்கத்தின் மேம்பாட்டு பணிகள், சாலைப் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.