சுவிஸ் கடைகளில் சில லிண்ட் சாக்லேட்டுகள் தற்காலிகமாக இல்லையென மிக்க்ரோஸ் விளக்கம்
சுவிஸ் நாட்டின் முக்கிய சில்லறை வணிக நிறுவனமான மிக்க்ரோஸ் (Migros) மற்றும் பிரபல சாக்லேட் தயாரிப்பாளரான லிண்ட் & ஸ்ப்ரூங்லி (Lindt & Sprüngli) இடையிலான விலை பேச்சுவார்த்தை காரணமாக, தற்போது சில மிக்ரோஸ் கடைகளில் லிண்ட் தயாரிப்புகள் கிடைக்கவில்லை.
மிக்ரோஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “சில கிளைகளில் லிண்ட் சாக்லேட்டுகளை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படலாம்” என்று Awp செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தினார். இந்த பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் தயாரிப்புகள் கிடைப்பதிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. தற்போது, இந்த விவாதங்கள் எப்போது முடிவடையும் என்பது தெளிவாக தெரியவில்லை.
மிக்ரோஸ், சுவிஸ்ஸிலும் ஐரோப்பாவிலும் உணவுப் பொருட்களுக்கு நியாயமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலை கொடுப்பதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “சில பிரபலமான பிராண்டுகள் நாங்கள் ஏற்க முடியாத விலை உயர்வை கோரும்போது, முதலில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயல்கிறோம். எங்கள் முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற விலை உயர்வைத் தவிர்ப்பதே,” என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

லிண்ட் & ஸ்ப்ரூங்லி நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி, “மிக்ரோஸ் கூட்டுறவு சம்மேளனம் தனது புதிய கொள்முதல் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், மிக்ரோஸ் மற்றும் டென்னர் (Denner) கடைகளில் விற்கப்படும் லிண்ட் தயாரிப்புகளைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் காரணமாக சில தயாரிப்புகள் தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கவில்லை,” என தெரிவித்தது.
சூரிக் மாநிலத்தின் கில்பெர்க் (Kilchberg) தலைமையகத்தில் உள்ள இந்த சாக்லேட் நிறுவனமும் தயாரிப்புகள் விரைவில் மீண்டும் கடைகளில் கிடைக்கும்படி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனம் இதற்காக வருத்தம் தெரிவித்தாலும், வாடிக்கையாளர்களுக்கு சீரான விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
சுவிஸ்ஸில் லிண்ட் சாக்லேட்டுகள் நீண்டகாலமாக உயர்தரமான சாக்லேட்டுகளாகப் பிரபலமாக உள்ளன. எனவே, இந்த தற்காலிக தட்டுப்பாடு பல வாடிக்கையாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
© Keystone ATS