சூரிச் மாநிலத்தின் ப்ஃபெஃபிகோன் (Pfäffikon ZH) பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை (3 நவம்பர் 2025) நிகழ்ந்த ஒரு கடும் சாலை விபத்தில், இலங்கையைச் சேர்ந்த 53 வயது தமிழ் நபர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான செய்தியை எமது ஊடகம் முந்திக்கொண்டு வழங்கியிருந்தது.
திங்கள்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கெம்ப்ட்டால் சாலை (Kempttalstrasse) பகுதியில் டெலிவரி வாகனம் மரத்தில் மோதியதாக காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப்படையினர், வாகனத்தின் உள்ளே வாகன ஓட்டுநர் மயக்க நிலையில் இருப்பதை கண்டனர். முதலுதவி அளிக்கப்பட்டாலும், அவர் அங்கு உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
முதல் கட்ட விசாரணைகளின் படி, அந்த நபர் ஃபேரால்டார்ஃப் (Fehraltorf) இருந்து ப்ஃபெஃபிகோன் நோக்கி தனியாக பயணம் செய்துள்ளார். அவர் ஓட்டிச்சென்ற வாகனம் எதிர்புற பாதையில் சென்று, சாலையின் இடது ஓரத்தைக் கடந்து, நேராக ஒரு மரத்தில் மோதியுள்ளது. ஏன் இவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் தூக்க கலக்கத்தில் இவ்வாறு நடந்ததா..? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருந்திருக்குமா என்பது போலீசாரின் விசாரணையின் முடிவில்தான் புலப்படும்.
சூரிச் மாநில காவல்துறை மற்றும் See/Oberland பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றன. தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சட்டப் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்தனர்.
இந்த விபத்தினால் கெம்ப்ட்டால் சாலை இருபுறத்திலும் காலை 8 மணி வரை மூடப்பட்டிருந்தது. ப்ஃபெஃபிகோன் மற்றும் ஃபேரால்டார்ஃப் தீயணைப்பு படையினர் போக்குவரத்துக்கான மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தினர். உஸ்டர் மருத்துவமனை அவசர சேவை, Regio144 மருத்துவ குழு, Rega ஹெலிகாப்டர், சட்டப் புலனாய்வாளர் மற்றும் அவசர ஆலோசகர் ஆகியோரும் மீட்புப்பணியில் பங்கேற்றனர்.
**தமிழர் சமூகத்தில் துயரமும் சிந்தனையும்**
இந்த சம்பவம் சுவிஸில் உள்ள தமிழ் சமூகத்தில் ஆழ்ந்த துயரத்தையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது. பல இலங்கையர்கள், குறிப்பாக தமிழர்கள், சுவிஸில் வாகன விநியோகம், சுத்தம் செய்யும் சேவை, தொழிற்சாலை மற்றும் உணவு விநியோகம் போன்ற துறைகளில் கடுமையாக உழைக்கின்றனர். அதிகாலையிலும், இரவு நேரங்களிலும், வேலைசெய்யும் அழுத்தம் — ஓய்வின்மை, மன அழுத்தம் மற்றும் தூக்கக் குறைபாட்டை உருவாக்குகிறது. இவை சில நேரங்களில் உயிர் பறிக்கும் விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

**விழிப்புணர்வு செய்தி – “பாதுகாப்பே முதலிடம்
இவ்வாறான சோகமான இறப்புகளில் இருந்து தவிர்க்க அவசியம் நாம் சில விடயங்களை கடைப்பித்தாகவேண்டும்.
ஓய்வின்றி ஓட்ட வேண்டாம் :- தூக்கக் குறைவான நிலையில் வாகனம் ஓட்டுவது மது அருந்தி ஓட்டுவதைப் போன்ற ஆபத்தை உருவாக்கும். குறைந்தபட்சம் 6 மணி நேர உறக்கம் பெற்ற பின் ஓட்டுவது அவசியம்.
இரவு நேர பணிகளில் இடைவேளை அவசியம் : அதிக நேரம் வாகனம் ஓட்டும் போது அல்லது இரவில் வாகனம் ஓட்டும்போது ஒரு தேனீர் இடைவேளை, சற்று குளிர்ந்த காற்று, சிறிய ஓய்வு என்பன வரவிருக்கும் ஆபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
சுவிஸில் உள்ள ஒவ்வொரு தமிழ் தொழிலாளரும் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பில் மூழ்கியுள்ளனர். ஆனால் அந்த உழைப்பின் பயன் உயிருடன் இருக்கும்போதுதான் அர்த்தமுள்ளது. ப்ஃபெஃபிகோனில் உயிரிழந்த நம் தமிழ் சகோதரரின் இழப்பை, நாம் ஒரு விழிப்புணர்வு செய்தியாக எடுத்துக்கொள்வோம்.
அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். இறந்த அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ்தமிழ் ஊடகத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.
செய்தி தொகுப்பு தேவா- மதன்