சுவிஸில் 2024ஆம் ஆண்டில் 25,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் கைவிடப்பட்டன
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 25,000க்கும் அதிகமான விலங்குகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டதாக சுவிஸ் விலங்கு பாதுகாப்பு சங்கம் (PSA) தெரிவித்துள்ளது. இந்நிலை, நாட்டில் செல்லப்பிராணிகளை பொறுப்பின்றி பராமரிக்கும் பழக்கவழக்கங்கள் அதிகரித்திருப்பதை காட்டுவதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் நாட்டின் பல தங்கும் மையங்களில் மொத்தம் 32,079 விலங்குகள் சேர்க்கப்பட்டன. இது 2023ஆம் ஆண்டை விட 572 அதிகம். அவற்றில் 25,403 விலங்குகள் கைவிடப்பட்டவை, 5,449 தெருவில் கண்டுபிடிக்கப்பட்டவை மற்றும் 1,234 விலங்குகள் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளின் மூலம் மீட்கப்பட்டவை ஆகும்.

இந்த அதிகரிப்பு பல வகை விலங்குகளிலும் காணப்பட்டது. குறிப்பாக பூனைகள் எண்ணிக்கையில் அதிக உயர்வைச் சந்தித்துள்ளன – மொத்தம் 7,963 பூனைகள் தங்கும் மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 357 அதிகம். முயல்கள் மற்றும் சிறு எலிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் 2,047 ஆக உயர்ந்துள்ளது.
அதிக அளவில் கைவிடப்பட்ட விலங்குகளாக மீன்கள் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றன – 18,605 மீன்கள் தங்குமிடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சிறிது மட்டுமே மாறியுள்ளது. நாய்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்துள்ளது – 865 இலிருந்து 1,009 ஆக.
“இந்த உயர்வு கவலைக்கிடமானது,” என்று PSA இயக்குநர் மார்கோ மெட்லர் தெரிவித்துள்ளார். “நாட்டின் பல விலங்கு பாதுகாப்பு மையங்கள் தற்போது கொள்ளளவின் உச்சம் அடைந்துள்ளன,” என்றும் அவர் கூறினார்.
அமைப்பு மக்களிடம் ஒரு விலங்கினை செல்லப்பிராணியாக எடுப்பதற்கு முன் நன்கு யோசித்து முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. “ஒரு விலங்கின் வாழ்க்கை ஒரு பொம்மை அல்ல, அது நீண்டகால பொறுப்பு,” என PSA வலியுறுத்தியுள்ளது.