சுவிட்சர்லாந்தில் பயங்கரம்.!! படகுகள் மோதி கோரவிபத்து : இருவர் பலி.!!
சுவிட்சர்லாந்தின், ஸ்விட்ஸ் கன்டோன் – ஆல்டென்டார்ஃப் பகுதியில் உள்ள ஓபர்சே ஏரியில் நடந்த படகு மோதல் விபத்து, அங்குள்ள முழு சமூகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 10.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 36 வயது ஆண் ஒருவரும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலியானவர்களில் ஒருவரின் அடையாளம்
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், ஊடகத் தகவலின்படி, முந்தைய காலத்தில் “மிஸ்டர் சுவிஸ்” போட்டியில் போட்டியிட்டவர் என்றும், மென்பொருள் ஆலோசனைத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலதிபர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து எவ்வாறு நடந்தது?
விசாரணையாளர்கள் தெரிவித்தபடி, இரண்டு படகுகள் கடுமையாக மோதியுள்ளன. 46 வயது படகு ஓட்டுனர், தனது மோட்டார் படகை சூரிக் ஏரியிலிருந்து ஓபர்சே ஏரிக்குள் செலுத்தி வந்தபோது, அவருடன் இருந்த இரு நண்பர்களுடன் ஆல்டென்டார்ஃஃப்பை நோக்கி பயணம் செய்தார். அப்போது, ஏழு பேர் இருந்த மற்றொரு படகுடன் மோதியதில், அந்த ஏழு பேரில் இருவர் உயிரிழந்தனர். நால்வர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாட்சிகளின் விளக்கம்
விபத்து நிகழ்ந்த பகுதியில் ஆபத்தான நிலைமை எதுவும் இல்லை, ஆனால் இரவு நேரம் முழுமையாக இருள் சூழ்ந்திருந்தது என அருகில் பயணித்த 54 வயது எரிக் தெரிவித்துள்ளார். “யாராவது விளக்கு (Lights) இன்றி பயணித்திருந்தால், அது கண்களுக்கு முற்றிலும் தெரியாமல் போயிருக்கும்” என்றும் அவர் கூறினார்.

ஏரிக்கரையில் வசிக்கும் பிரிகிட்டே கூறுகையில்: “போலீஸ் மோட்டார் படகுகள் நீல விளக்குகளுடன் வந்து, பின்னர் ரேகா ஹெலிகாப்டர் மேலிருந்து ஏரியை ஒளிரச் செய்ததைப் பார்த்தோம்” என்றார். மற்றொரு தம்பதியினர், “ஒரு படகிலிருந்து ஒரு பெண் அதிர்ச்சியில் கத்திக்கொண்டு கீழே இறங்கினார். அவர் கண்கலங்கியபடி திணறி அழுதார். மீட்புப்படையினர் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்” என்று விவரித்தனர்.
மீட்பு மற்றும் விசாரணை
மோதிய படகுகளில் ஒன்று தானாகவே அருகிலிருந்த துறைமுகத்தை அடைந்தது. மற்றொரு படகோ போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டது. இரு படகுகளும் தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்விட்ஸ் கன்டோன் போலீசும், மாநில வழக்கறிஞர் அலுவலகமும் இணைந்து விபத்தின் சரியான காரணத்தை கண்டறியும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
அதிர்ச்சியில் உள்ள சமூகமே
“நாங்கள் இங்கு எட்டு ஆண்டுகளாக வசிக்கிறோம், இதுபோல ஒரு விபத்து எப்போதும் நடக்கவில்லை” என ஆல்டென்டார்ஃப் பகுதியில் வசிக்கும் ஒருவர் மனமுடைந்தபடி கூறினார்.
@Kapo SZ