இபிசாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் சுவிஸ் சுற்றுலாப் பயணிகள்
ஸ்பெயின் நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தீவு இபிசாவில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரம் உட்பட பல பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியதால் வாகனங்கள் இயங்க முடியாமல், ஹோட்டல்களிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்துள்ள பலர் தலைநகரிலுள்ள ஒரு ஹோட்டலில் சிக்கியுள்ளனர். “இது முற்றிலும் வேடிக்கையல்ல, மிகவும் சிரமமாக இருக்கிறது,” என்று கூறிய ஒரு சுவிஸ் பெண்ணின் குரலை “சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை” பத்திரிகை பதிவு செய்துள்ளது. அவருடன் இருந்த தோழி மட்டும் சிரித்தபடி, “அதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்” என்று சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டலின் உள்ளகப் பகுதிகள் முழுவதும் தண்ணீரால் நனைந்து, சுவர்கள், கதவுகள், மின்விளக்குகள் வரை வழிந்தோடுவதாக பயணிகள் பகிர்ந்துள்ளனர். ஹோட்டலின் நுழைவாயிலில் தண்ணீர் புகாமல் தடுக்க ஊழியர்களுடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளும் கையோடு உதவி செய்கின்றனர். இருப்பினும் அனைவரும் ஹோட்டலின் மண்டபத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருப்பதால் அவர்கள் தனித்தனியாகச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
பலர் இன்று தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியதால் வாகனங்கள் இயங்க முடியாமல் போயுள்ளது. சிலர் காரில் செல்ல முயன்றும் நடுவே வாகனம் சிக்கியதால் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமான சேவைகள் குறித்து தெளிவான தகவல் எதுவும் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஸ்பெயின் வானிலை சேவை இபிசா மற்றும் போர்மென்டெரா தீவுகளுக்கான எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. “மிகவும் தீவிரமான” வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், “அதிக மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இபிசா, உலகப் புகழ் பெற்ற விடுமுறைத் தலமாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் தற்போதைய நிலைமை காரணமாக சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
© KeystoneSDA