சுவிஸ் சுரங்கப்பாதை நடுவே காரை நிறுத்திய ஜேர்மன் பாடகர் சிக்கலில்.! சுவிட்சர்லாந்தில் உள்ள சுரங்கப்பாதையின் நடுவில் தனது காரை நிறுத்தி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் சுவிஸ் போலீசாரின் வலையில் சிக்கியுள்ளார்.
28 வயதான ஜேர்மன் நாட்டு பாடகரான சாம்ரா சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பின்னர் சூரிச்சின் யூட்லிபெர்க் சுரங்கப்பாதையின் நடுவில் வலது பக்கத்தில் தனது காரை குறுக்கே நிறுத்தி அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார்.
குறித்த புகைப்படத்தை அண்மையில் அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் இவ்வாறான செயற்பாடுகள் விரும்பத்தாகதது எனவும் அதிக விலை செலுத்த வேண்டிய செயல் எனவும் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றமையோடு இது குறித்து சூரிச் கன்டோனல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாம்ராவின் இந்த செயல் தொடர்பாக ஊடகங்களின் கோரிக்கைக்கு அவர் உட்பட அவரது நிர்வாகமும் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@Samra (Instagram)
சமூக ஊடகங்களில் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்றதொரு சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டீடிகோனில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது 38 வயதான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முட்செலன் சுரங்கப்பாதையின் நடுவே நின்றார்.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 1300 பிராங்குகள் விதி மீறலுக்கான செலவாகவும் அபராதம் விதிக்கப்ட்டிருந்தது.
இது மாத்திரமின்றி அந்த நபரின் ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே சாம்ரா அதே தண்டனையை எதிர்கொள்வாரா அல்லது போஸ் கொடுத்ததற்காக கூடுதல் சிக்கலை எதிர்கொள்வாரா? என போலீசாரின் விசாரணையின் பின்பாடே தெரியவரும்.