ஜெனீவாவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் ரொக்கப் பணம் கட்டாயம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்கள் விரைவில் ரொக்கப் பணத்தை கட்டாயமாக ஏற்க வேண்டிய புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, ஜெனீவா மாநில சட்டமன்றமான Grand Council இல் நடந்த வாக்கெடுப்பில் 53 பேர் ஆதரவு தெரிவித்தனர், 35 பேர் எதிர்த்தனர், ஒருவரோ விலகி இருந்தார்.
இந்த சட்டம், நுகர்வோரின் தேர்வுரிமையைப் பாதுகாப்பதோடு, அதிகமான கார்டு பரிவர்த்தனை கட்டணங்களால் பாதிக்கப்படும் சிறிய தொழில்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஜெனீவாவில் பல முதிய குடிமக்கள் இன்னும் ரொக்கப் பணத்தையே விரும்புகின்றனர் என்பதும் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

மறுபுறம், மையக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி (Liberal Party) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த முடிவை விமர்சித்துள்ளன. அவர்கள், இந்த சட்டம் பொருளாதார சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்றும், சில துறைகளுக்கு மட்டும் வேறு விதி விதிப்பது சமமல்ல என்றும் கூறினர்.
இந்த மாற்றம் ஜெனீவாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். சமீப மாதங்களில், சில உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் கார்டு மூலம் மட்டுமே பணம் ஏற்கும் நிலைமை குறித்து மக்கள் மத்தியில் அதிகமான புகார்கள் எழுந்திருந்தன.
சுவிட்சர்லாந்தில் டிஜிட்டல் கட்டணங்கள் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தாலும், அரசு மற்றும் பொதுமக்கள் ரொக்கப் பணத்தின் பயன்பாட்டை முழுமையாகக் குறைப்பது நியாயமல்ல என்று கருதுகின்றனர். ஜெனீவாவின் புதிய சட்டம், ரொக்கப் பணத்தின் முக்கியத்துவம் இன்னும் முடிவடையவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
© WRS