ChatGPT கணக்கை குறிவைத்து போலி மின்னஞ்சல்கள் – சுவிஸ் சைபர் போலீஸ் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில், ChatGPT பயனர்களை குறிவைத்து புதிய மோசடி முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “கிரெடிட் கார்டு கட்டணத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது” என்று கூறும் போலி மின்னஞ்சல்கள் தற்போது பலருக்கு வந்துள்ளன. அவை உடனடியாக பணம் செலுத்த வேண்டுமெனக் கோருகின்றன.
இந்த மின்னஞ்சல்களில் உள்ள இணைப்பை (link) சொடுக்கும்போது, ChatGPTயின் உண்மையான தளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் போலி இணையப்பக்கம் திறக்கப்படுகிறது. அதில் பயனர் தமது உள்நுழைவு விவரங்களை (login details) மற்றும் கார்டு தகவல்களை மீண்டும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறது. இதனால் அந்த முக்கியமான தகவல்கள் நேரடியாக மோசடிக்காரர்களின் கைக்குச் செல்கின்றன. அவர்கள் உடனடியாக அந்த தரவுகளை ஆன்லைன் கொள்முதல் அல்லது அனுமதியற்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முயலுகின்றனர். சில நேரங்களில், முதலில் குறிப்பிடப்பட்டதைவிட அதிக தொகைகளும் எடுக்கப்படுகின்றன.

சுவிஸ் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) மற்றும் போலீசார், இத்தகைய மின்னஞ்சல்களை பெற்றால் அவற்றை Cybercrimepolice.ch-க்கு அனுப்புமாறு பரிந்துரைத்துள்ளனர். பயனர்கள் அந்த மின்னஞ்சல்களை புறக்கணித்து, spam அல்லது junk கோப்புறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ChatGPT போன்ற சேவைகளில் உள்நுழைவதற்கு எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை நேரடியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், சந்தேகமான இணைப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் சாத்தியமான இடங்களில் பலநிலை அங்கீகாரம் (Multi-Factor Authentication) செயல்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இத்தகைய மின்னஞ்சல்களில் தங்கள் தகவல்களை வழங்கியவர்கள் உடனடியாக ChatGPT மற்றும் அதே கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் பிற கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வங்கியையோ அல்லது கிரெடிட் கார்டு நிறுவனத்தையோ தொடர்பு கொண்டு மோசடியை அறிவிக்கவும், அருகிலுள்ள கான்டோன் போலீசில் புகார் அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
© Cybercrimepolice.ch