Fribourg மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Fribourg கன்டோனல் போலீசார் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் குறித்த சம்பவத்தில் 52 வயதுடைய நபரும் அவரது 13 வயது மகளும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, சுமார் 20 பேர் தீயினால் ஏற்பட்ட புகையினை சுவாசித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்குப்பட்டுள்ளது. 48 வயதான ஒரு பெண் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் 90 பேர் வரையில் கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் இப்போது நண்பர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிக்கையின்படி, கட்டிடத்தின் நிலத்தடி கார் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாலை 2.30 மணிக்கு அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இது தொடர்பாக Fribourg கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.