சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு வாகன ஓட்டிகளுக்கு புதிய “டிரான்சிட் வரி” பரிந்துரை
சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி மேலவை, சுவிஸ் நாட்டின் வழியாக மட்டும் பயணம் செய்யும் வெளிநாட்டு வாகன ஓட்டிகளுக்கு புதிய வரியை விதிக்க வேண்டுமெனக் கூறிய முன்மொழிவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த “டிரான்சிட் வரி” சுவிட்சர்லாந்துக்குள் அண்டை நாடுகளிலிருந்து நுழைந்து, இடைநிறுத்தமின்றி மற்றொரு அண்டை நாட்டுக்கு வெளியேறும் வாகனங்களுக்கு பொருந்தும். அதாவது, சுவிஸ் சாலைகளைக் குடியிருப்பதற்கோ சுற்றுலாவிற்கோ பயன்படுத்தாமல், வெறுமனே கடந்து செல்லும் போக்குவரத்திற்கு மட்டும் இந்தக் கட்டணம் விதிக்கப்படும்.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (பின்னர் அரசு வரையறுக்கும்) நாட்டில் தங்கும் சுற்றுலா பயணிகள் இந்த வரியிலிருந்து விலக்கப்படுவார்கள். காரணம், அவர்கள் சாலை வசதிகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பயணம் செய்து செலவிடுவதால், “முழுக்க முழுக்க கடந்து செல்லும் போக்குவரத்து” எனக் கருதப்படமாட்டார்கள்.
சுவிட்சர்லாந்து, ஐரோப்பாவின் மையப்பகுதியில் இருப்பதால், பல சரக்கு மற்றும் தனியார் வாகனங்கள் தினசரி சுவிஸ் நாட்டின் வழியாகச் செல்லும் சூழல் உள்ளது. இந்தப் புதிய பரிந்துரை, சாலை வசதிகளின் பராமரிப்பு செலவுகளை சமநிலைப்படுத்தவும், சுமையை வெளிநாட்டு பயணிகளுடனும் பகிர்ந்து கொள்ளவும் அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எப்போது, எந்த அளவில் இந்த வரி அமல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
© KeystoneSDA