சுவீஸில் நமது கலைஞர்களின் படைப்பான ‘தீப்பந்தம்’ திரைப்படத்தின் முதல் திரையிடல்
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட ‘தீப்பந்தம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி, சுவீஸில் உள்ள கினோ கிளாடியா (Kino Claudia) திரையரங்கில் முதல் முறையாக திரையிடப்பட உள்ளது.
சமூக உணர்வுகள், தாயகத்தின் வாழ்க்கைநிலை மற்றும் மனிதாபிமானப் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தீப்பந்தம்’ திரைப்படம், தாயகத் திரைப்பட உலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் சுவீஸ் நாட்டில்முதல் முறையாக திரையிடுவதால் , சுவீஸில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்வில் பல தமிழ் சங்கங்களும் கலாச்சார அமைப்புகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையிடலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ‘தீப்பந்தம்’ திரைப்படத்தின் மூலம் தாயகத்தின் கலைஞர்கள் தங்கள் குரலை உலகளவில் பரப்பும் இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளனர் என்று திரைப்படத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த திரைப்படம் எமது மண்ணில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சமூகத்திற்கான ஒரு சிறந்த செய்தியை சொல்லும் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, வரும் அக்டோபர் 26 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர்கள் தவறாமல் இந்த திரைப்படத்தை பார்வையிட்டு எமது கலைஞர்களை ஊக்குவிக்க ஆதரவுக்கரங்களை நீண்டுமாறும் திரைப்படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.