சுவிட்சர்லாந்தில் நகைகளை திருடி, அவற்றை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல முயன்ற இரண்டு பேரின் திட்டத்தை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். சூரிச் கன்டோனில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட மதிப்புள்ள நகைகளை பாணில் மறைத்து எடுத்து செல்ல முயன்ற இவர்கள் பிரஞ்சு எண் பதிவு கொண்ட காரில் எல்லையை கடக்க முயன்றபோது பிடிக்கப்பட்டனர்.
எல்லைச் சோதனைச் சாவடியில் சுங்க அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது, ரொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க நகைகள், கடிகாரங்கள், தங்க நாணயம் உள்ளிட்ட பல மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. வாகனத்தில் இருந்த இருவரும் ரோமேனிய குடிமக்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நகைகள் சமீபத்தில் சூரிச் கான்டனில் நிகழ்ந்த கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடையவை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் முதலில் சென் கேலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மேலான விசாரணைக்காக சூரிச் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
சூரிச் காவல்துறையினர் தற்போது இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு நாடுகளுக்கிடையிலான குற்றவியல் வலையமைப்புகள் செயல்படும் முறைகளையும், எல்லைச் சோதனைகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.