ஜெனீவா மாகாணத்தில் பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்.!!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் பொருட்களை டெலிவரி செய்வதற்காக ட்ரோன்களை பயன்படுத்தும் திட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அவசரத் தேவைகளுக்கான மருந்துகள் மற்றும் முக்கியமான பொருட்கள் தாமதமாவதால், ட்ரோன் டெலிவரி ஒரு பயனுள்ள மாற்று வழியாக இருக்கும் என புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதால் நேரம் மட்டுமல்ல, செலவும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். தற்போதைய முறையில் ஹெலிகாப்டர்கள் மூலம் அவசரப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் போது அதிக செயல்பாட்டு செலவு ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க குறைந்த செலவு, குறைந்த சத்தம், விரைவான போக்குவரத்து திறன் கொண்ட ட்ரோன்கள் நடைமுறை தீர்வாக கருதப்படுகின்றன.
ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. எல்லைப் பகுதியைத் தொடும் ஜெனீவா மாகாணத்தில், ட்ரோன்களின் தவறான பயன்படுத்தம் மூலம் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கக்கூடும் என்ற கவலை சிலர் வெளியிடுகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் பலப்படுத்தப்படாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதே விமர்சகர்களின் கருத்து.

தாங்கள் வெளியிட்ட ஆய்வு தகவல் பகிர்விற்காக மட்டுமே என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். மேலும், ஜெனீவாவில் காவல்துறை ஏற்கனவே சில பணிகளுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தி வருவது, தொழில்நுட்பம் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதற்கான நேரடி உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.
ஜெனீவாவில் ட்ரோன் டெலிவரி திட்டம் நகர்ப்புற போக்குவரத்து, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியமான விவாதமாக மாறி வருகிறது.