சுவிட்சர்லாந்தில் கடிகார நேர மாற்றம் – சுகாதார ஆபத்து என ஆய்வு எச்சரிக்கை
இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் கடிகார நேரம் மாற்றப்பட உள்ளது. ஆனால், இந்த நேர மாற்றம் உடல் நலத்துக்கு ஆபத்தாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
சுவிட்சர்லாந்து கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் 2011 முதல் 2023 வரை நடத்திய ஆய்வின் படி, வருடத்தில் இரண்டு முறை நேரம் மாற்றப்படும் போது – வசந்த காலத்திலும் (மார்ச் இறுதியில்) மற்றும் இலையுதிர் காலத்திலும் (அக்டோபர் இறுதியில்) – அவசர மருத்துவ பிரிவுகளுக்கு சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.
மார்ச் மாத இறுதியில், கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னேறும் போது, அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு சேரும் சம்பவங்கள் சராசரியாக 6.5% உயர்ந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது. இது பெரும்பாலும் 65 வயதுக்குட்பட்டவர்களிடையே அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், அக்டோபரில் நேரம் ஒரு மணி நேரம் பின்தள்ளப்படும் போது கூட, மருத்துவமனைகளுக்கு சேரும் எண்ணிக்கை 3.5% வரை உயர்ந்தது எனக் கூறப்படுகிறது.
வசந்த கால நேர மாற்றத்தின் போது இதயநாளி (circulatory) மற்றும் சுவாச (respiratory) பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம், விபத்து சார்ந்த காயங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, மனித உடல் இயற்கையான ‘உள் கடிகாரம்’ (biological clock) படி இயங்குவதால், செயற்கையாக நேரத்தை மாற்றும் இந்த மாற்றம் உடல் சமநிலையை பாதித்து, குறிப்பாக தூக்கக் குறைவு மற்றும் இதய சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியிலும் அக்டோபர் மாத இறுதியிலும் கடிகார நேரம் மாற்றப்படும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும், இதன் உடல் நல விளைவுகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நீடிக்கிறது.