யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவில் சுவிஸ் மீண்டும் உறுப்பினராகத் தேர்வு
பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுவிஸ் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவில் மீண்டும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2025 முதல் 2029 வரை சுவிஸ் இந்தப் பொறுப்பில் இருக்கும் என்று சுவிஸ் வெளிநாட்டு அலுவல்கள் துறை (DFAE) அறிவித்துள்ளது.
1972 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும், 1975 இல் சுவிஸ் அங்கீகரித்தும் உள்ள உலக பண்பாட்டு மற்றும் இயற்கை பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் சர்வதேச ஒப்பந்தத்தின் செயல்பாட்டை கண்காணிப்பது இந்தக் குழுவின் முக்கிய பணியாகும். எதிர்கால தலைமுறைக்கும் முக்கியமான மதிப்புடைய பண்பாட்டு மற்றும் இயற்கைச் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு இந்த ஒப்பந்தம் உரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும், இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ள 196 நாடுகளில் இருந்து 21 நாடுகள் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. உலக பாரம்பரியப் பட்டியலில் புதிய தளங்களைச் சேர்ப்பது, ஏற்கனவே சேர்க்கப்பட்ட தளங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பாய்வு செய்வது, மற்றும் ஒப்பந்தத்தின் செயல்பாட்டைத் தரமான முறையில் முன்னேற்ற தேவையான ஆதரவை வழங்குவது ஆகியவை இவர்களின் பொறுப்பாகும். தற்போது உலக பாரம்பரியப் பட்டியலில் 1248 தளங்கள் உள்ளன; அவற்றில் 13 சுவிஸில் அமைந்துள்ளன.

சுவிஸ் கடைசியாக 2009 முதல் 2013 வரை இந்தக் குழுவின் உறுப்பினராக இருந்தது; அதற்கு முன் 1978 முதல் 1985 வரை முதலாவது காலக்கட்டத்தில் உறுப்பினராகச் செயல்பட்டது. இம்முறை மீண்டும் குழுவில் சேரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, பாரம்பரியக் காப்புறுதி மற்றும் மேலாண்மையில் உள்ள அனுபவங்களையும் அறிவையும் சர்வதேச அளவில் பகிர்ந்து கொள்ளுதல், நீண்டகால பாதுகாப்பிற்கான உறுதியான முயற்சிகள், மற்றும் பாரம்பரியத்தை உலகளாவிய வளர்ச்சிக்கான முக்கிய வளமாக முன்னிறுத்துதல் ஆகியவற்றில் சுவிஸ் அதிக கவனம் செலுத்துவதாக பறைசாற்றியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் உயிரியல் பல்வகைத் தன்மையைப் பாதுகாக்க இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய ஊக்குவிப்பான கருவி என்பதையும் சுவிஸ் வலியுறுத்துகிறது.