சுவிட்சர்லாந்து தனது வலுவான பொருளாதாரமும் கல்வி அமைப்பும் காரணமாக உலகின் போட்டித்தன்மை கொண்ட நாடாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
‘போட்டியாளர் அறிக்கை 2025’ (Competitiveness Report 2025) எனப்படும் இந்த ஆய்வை “ஏய்ட் காம்பிட்டிட்டிவ்னஸ் லாப்” (Eight Competitiveness Lab) என்ற சிந்தனைக்குழு நடத்தியது. ஆய்வில் பொருளாதாரம், கல்வி, சமூக அமைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு துறைகளில் 58 நாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இதில் சுவிட்சர்லாந்து பொருளாதாரம் மற்றும் கல்வி துறைகளில் முதல் இடத்தை பிடித்ததோடு, நிலைத்தன்மையில் நான்காவது இடத்தையும் சமூக துறையில் எட்டாவது இடத்தையும் பெற்றது.
இதன் மூலம், சுவிட்சர்லாந்து ஐரோப்பாவில் மட்டுமன்றி, உலகளாவிய அளவிலும் மிகவும் போட்டித்தன்மை கொண்ட நாடு என அறிவிக்கப்பட்டதாக “ஏய்ட் அட்வைசரி” நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளை முந்தி மீண்டும் உலகின் முதல் இடத்தை சுவிட்சர்லாந்து கைப்பற்றியுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, சுவிஸ் அரசாங்கத்தின் நடைமுறைபூர்வ அணுகுமுறை, எளிமையான விதிமுறைகள், மற்றும் அவசரநிலைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் திறன் ஆகியவை அந்த நாட்டை அண்டை நாடுகளைக் காட்டிலும் பலப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், புதிய தொழில்நுட்பங்களில் கவனம், சர்வதேச ஒத்துழைப்பில் ஈடுபாடு, மற்றும் பாரம்பரிய சுவிஸ் மதிப்புகளைப் பேணும் நடைமுறை ஆகியனவும் பாராட்டப்பட்டன.
அறிக்கையின் முடிவில், “சுவிட்சர்லாந்தின் வலுவான பொருளாதார அடித்தளம், உறுதியான உட்கட்டுமான வசதிகள், புதுமை திறன் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவை உலகின் மிகப்போட்டிதன்மை மிக்க நாடு என்ற அந்தஸ்தை பெற முக்கிய காரணங்களாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.