காசா பகுதியில் காயமடைந்த குழந்தைககளுக்கு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை
காசா பகுதியில் கடுமையாக காயமடைந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விரைவில் சுவிட்சர்லாந்துக்கு மாற்றப்பட உள்ளனர். ரேகா (Rega) விமான மீட்பு சேவையின் உதவியுடன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவார்கள்.
கடந்த சில வாரங்களாக, சுவிஸ் கூட்டாட்சி அரசு பல மாநிலங்களிடம் இந்த மனிதாபிமான முயற்சிக்கான ஆதரவை அமைதியாக கோரியிருந்தது. அதன் விளைவாக பாசல், ஜெனீவா, டிசினோ மற்றும் வாலேஸ் போன்ற பல மாநிலங்கள் காயமடைந்த குழந்தைகளில் சிலரை தங்களின் மருத்துவமனைகளில் சேர்க்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.
ஆனால், சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய மாநிலமான சூரிக் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. சூரிக்கின் சுகாதாரத் துறை அமைச்சர், வலதுசாரி UDC கட்சியைச் சேர்ந்த நத்தாலி ரிக்க்லி தலைமையில், இந்த மனிதாபிமான நடவடிக்கையில் பங்கேற்பதை நிராகரித்துள்ளதாக SonntagsBlick பத்திரிகை தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும், ஏனெனில் சூரிக்கில் உலகப் புகழ்பெற்ற குழந்தை மருத்துவமனை அமைந்துள்ளது.

சுகாதாரத் துறையின் சில அதிகாரிகள் இந்த முடிவால் ஆச்சரியமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறையின் பேச்சாளர் பேட்ரிக் போரர் தெரிவித்ததாவது, “நாங்கள் பொதுவாக “அலுவல் முறைப்படி” (Officially) அல்லாத கோரிக்கைகளை ஏற்க மாட்டோம்” என்று கூறினார், ஆனால் நிராகரிப்பு காரணத்தை விளக்க மறுத்தார்.
அரசு, இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்க விரும்பும் கன்டோன்கள் சுவிஸ் குடியேற்றச் செயலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பேட்ரிக் போரர் கூறியதாவது, சூரிக் மாநில அரசு இந்த விஷயத்தை தங்களது இலையுதிர் கால விடுமுறைகள் முடிந்த பின், அக்டோபர் இறுதியில் விவாதிக்கவுள்ளது.
இந்த நடவடிக்கை, சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான கொள்கைக்கு ஏற்ப, போர் பாதித்த பிரதேசங்களில் இருந்து குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவியை வழங்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
© 20min