சுகாதாரக் காப்பீடு செலவு குறையவுள்ள ஒரே மாகாணம் – சுவிட்சர்லாந்தில் அதிரடி மாற்றம்
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான சுகாதாரக் காப்பீடு கட்டணங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் சராசரியாக குறைந்தது நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரச் செலவுகள் உயராமல், மாறாக 15 சதவீதம் வரை குறையவுள்ள அதிர்ஷ்டசாலி கண்டோன் ஒன்று உள்ளது. அது சுக் (Zug) மாகாணம்தான்.
சுக்கின் குடிமக்களுக்கு இவ்வளவு நன்மை கிடைப்பதற்கான முக்கிய காரணம் அந்தக் கண்டோனின் வலுவான நிதி நிலை. சுக் நிதியமைச்சர் ஹைன்ஸ் டேன்லர் தற்போது 200 மில்லியன் ஃப்ராங்க் அதிகப்படியான வருவாயைக் கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியை குடிமக்களுக்காக ஒதுக்க தீர்மானித்துள்ளார்.
அதன் அடிப்படையில், 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் மருத்துவமனையில் ஏற்படும் சிகிச்சைச் செலவின் 99 சதவீதத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் காப்பீடு கட்டணங்களில் நேரடியாகக் குறைவு ஏற்படும்.

உதாரணமாக, தற்போது மாதந்தோறும் 500 ஃப்ராங்க் செலுத்தும் ஒருவர், 2026இல் மாதத்திற்கு 425 ஃப்ராங்க் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வருடத்திற்கு சுமார் 900 ஃப்ராங்க் வரை சேமிப்பு கிடைக்கும்.
சுவிட்சர்லாந்தின் பிற பகுதிகளில் மக்கள் சுகாதாரச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில், சுக் கண்டோன் இவ்வாறு மக்களுக்கு நிம்மதியளிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாட்டின் சில மற்ற கண்டோன்களும் நிதி அதிகப்படியை அனுபவித்து வருவதாக அறியப்படுகிறது. ஆனால், சுக்கைப் போல நேரடியாகக் குடிமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளவை குறைவு.
இதனால், 2026ஆம் ஆண்டில் சுகாதாரக் காப்பீட்டுச் செலவு குறையவிருக்கும் ஒரே கண்டோனாக சுக் தனித்தன்மை பெறுகிறது.
© KeystoneSDA