சுவிட்சர்லாந்தில் பியர் விற்பனையில் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில் பீர் விற்பனையின் சரிவு இந்த ஆண்டிலும் நீடித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2024/25 உற்பத்தி ஆண்டில் செப்டம்பர் மாத இறுதிவரை, மது உள்ளதும் இல்லாததும் சேர்த்து மொத்த பீர் விற்பனை 1.8% குறைந்து 4.72 மில்லியன் ஹெக்டோலிட்டராக பதிவாகியுள்ளது. ஒருகாலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற க்ராஃப்ட் பீர் அதன் பிரபலத்திலிருந்து மெதுவாக கீழிறங்கிக் கொண்டிருக்கிறதாம்.
ஸ்விஸ் ப்ரீவர்ஸ் அசோசியேஷன் தெரிவித்ததன்படி, க்ராஃப்ட் பியர்களின் வீழ்ச்சிக்கு மாற்றாக லேகர், பேல் ஏல் மற்றும் குறிப்பாக பில்ஸ்னர் போன்ற பாரம்பரிய பீர் வகைகளுக்கான தேவை மீண்டும் உயர்ந்து வருகிறது. பியர் குடிப்பழக்கத்தில் பாரம்பரிய சுவைகளுக்கு திரும்பும் போக்கு நாட்டில் அதிகரித்துவருவது இதன் பின்னணி காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் முதல் முறையாக புள்ளிவிபரங்களில் சேர்க்கப்பட்ட மதுவில்லா பியர் உற்பத்தி 13% உயர்ந்து 353,307 ஹெக்டோலிட்டராக உயர்ந்துள்ளது. இதனால் மதுவில்லா பியர்களின் சந்தைப் பங்கு 7% இலிருந்து 7.5% ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் போல சுவிஸ் மக்களிடமும் ஆரோக்கிய விழிப்புணர்வு உயர்வது இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் மதுவில்லா பியர்களை தவிர்த்து பார்க்கும்போது நிலைமை மேலும் மோசமாகிறது. மது உள்ள பீர் விற்பனை 2.8% குறைந்து 4.37 மில்லியன் ஹெக்டோலிட்டராக சரிந்துள்ளது. சுவிஸ் உணவகத் துறை ஏற்கனவே எதிர்கொண்டுவரும் சவால்கள் இந்த சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பியர் விற்பனையில் உணவகங்களின் பங்கு கடந்த ஆண்டின் 31.4% இலிருந்து 30.7% ஆகக் குறைந்துள்ளது.
இப்போது மக்கள் அதிகமாக கடைகளில் பியர் வாங்குவதை விரும்புகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்களும் சில்லறை கடைகளும் சுமார் சம அளவு விற்பனை செய்த நிலையில், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள் தெளிவாக முன்னிலை பெற்றுள்ளன. 14 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கிளப்புகள், பார்கள் மற்றும் பெரிய விழாக்களில் பங்கேற்பதை குறைத்துள்ளதும் பீர் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. தனிப்பட்ட மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மக்கள் அதிக நேரம் ஒதுக்குவதும் இந்த மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பீர் உற்பத்தியாளர்கள் எதிர்கால சந்தையை நிலைநிறுத்துவதற்காக ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் தயாரிப்புகளிலும், வீட்டிலிருந்து பயன்படும் புதிய பியர் வகைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.