பாலியல் வன்முறை என்பது அடிப்படை மனித உரிமைகளை நேரடியாகக் காயப்படுத்தும் கொடுமையான செயலாகும். அது வீடுகளுக்குள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் இடங்கள், வேலைப்புரியும் சூழல்கள் என சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது என்பதே சுவிட்சர்லாந்து குற்றத் தடுப்பு அமைப்பும் (SKP) பல கண்டோன்கள் மற்றும் நகர போலீசாரும் ஒருமனதாகக் கூறும் உண்மை.
இந்த உண்மையை மக்களின் மனதில் வலுவாக பதியச் செய்யவும், சமுதாயத்தில் பாலியல் வன்முறை எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை வெளிப்படுத்தவும், “Together without sexual violence” என்ற தேசிய விழிப்புணர்வு இயக்கத்தை அவர்கள் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.

இந்த இயக்கத்தின் நோக்கம், பாலியல் வன்முறையை எவ்வித சூழலிலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதையும், அதனைத் தடுக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்று திரண்டு செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாகும்.
எந்த வகையான பாலியல் வன்முறையும் இல்லாத சூழலில் மட்டுமே ஆரோக்கியமான, பாதுகாப்பான சமூக வாழ்க்கை உருவாகும் என அமைப்புகள் குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து நடத்தப்படும் இந்த வகையான சமூக விழிப்புணர்வு இயக்கங்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பான சூழலில் வாழ வழிவகுப்பதே பிரதான குறிக்கோளாகும்.
© Kapo TG