சுவிட்சர்லாந்தில் சோதனை ஓட்டத்திற்கு தயாராகும் தானியங்கி பஸ்கள்
சுவிட்சர்லாந்தின் PostBus நிறுவனம் தானியங்கி வாகன சேவையை சோதனை அடிப்படையில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லாமல், ஒவ்வொரு வாகனத்திலும் பாதுகாப்புக்காக ஒரு நிபுணர் ஓட்டுநர் இணைந்து இருப்பார் என்று நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இந்த சோதனைகள் செயின்ட்கேலன், துர்காவ், அப்பென்செல் இன்நர்ரோடன் மற்றும் அப்பென்செல் அவ்செர்ரோடன் ஆகிய கன்டோன்களில் நடைபெறுகின்றன.
இவ்வாகனங்கள் நால்வர் அமரக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2027ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கிழக்கு சுவிட்சர்லாந்தில் அவை நிரந்தர சேவையாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிராமப்புறங்களிலும் போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளிலும், குறிப்பாக மக்கள் நடமாட்டம் குறைந்த நேரங்களில், பொதுப் போக்குவரத்திற்கு துணையாகச் செயல்பட உள்ளது. சேவை தேவைக்கேற்ப (on-demand) கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 25 தானியங்கி வாகனங்கள் கொண்ட படையணி உருவாக்கப்படவுள்ளது.
Keystone-SDA
பயணிகள் தங்கள் பயணத்தை ஒரு மொபைல் செயலி (app) மூலம் முன்பதிவு செய்யலாம். ஒரே நேரத்தில் ஒரே வழித்தடத்தில் பயணம் செய்ய விரும்பும் பலர் பதிவு செய்தால், அந்தக் கணினி அமைப்பு பயணத்தை ஒருங்கிணைத்து, வாகனப் பயன்பாட்டை அதிகப்படுத்தும்.
PostBus நிறுவனம் இதை “பொதுப் போக்குவரத்தின் புதிய யுகத்தை அறிவிக்கும் முயற்சி” என வர்ணிக்கிறது. சேவை முழுமையாக இயங்கத் தொடங்கிய பின், அதை கட்டத்தாரமாக விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. “AmiGo” எனப்படும் இந்த தானியங்கி சேவை சீனாவின் Baidu நிறுவனத்துக்குச் சொந்தமான Apollo Go எனும் ரோபோ டாக்சி உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதற்கு சுவிஸ் கூட்டாட்சி போக்குவரத்து அலுவலகம், சாலைகள் அலுவலகம், நான்கு கான்டன்களின் அதிகாரிகள், TCS மற்றும் பிற கூட்டாளர்கள் ஆதரவு வழங்குகின்றனர்.
சுவிட்சர்லாந்து தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் துல்லியமான போக்குவரத்து அமைப்புக்காக உலகளவில் பெயர் பெற்ற நாடு என்பதால், இந்த தானியங்கி போக்குவரத்து முயற்சி அந்நாட்டின் போக்குவரத்து துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.