ஸ்விஸ் படைத்தளத்தில் நடந்த கொடூர செயல் – பூனையை வீரர்கள் மீது எறிந்த சர்ஜண்ட்
ஸ்விட்சர்லாந்தின் ஆர்காவ் (Aargau) கன்டோனில் உள்ள லென்ஸ்பெர்க் (Lenzburg) படைத்தளத்தில் பதிவான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவான்சிக் Minutes என்ற ஸ்விஸ் நாளிதழ் பெற்ற அந்த காட்சியில், ஒரு சர்ஜண்ட் (Sergeant) தூங்கிக் கொண்டிருந்த படைவீரர்கள்மீது ஒரு பூனையை இரண்டு முறை எறிவதை காணலாம். அருகில் இருந்த மற்ற வீரர்கள் அதைக் கண்டு சிரித்துக் கொண்டிருப்பதும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அந்த பூனை மிகுந்த பயத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றது போலத் தோன்றுகிறது. பின்னர் அதை வெளியே விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் கடந்த வசந்த காலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், பல வீரர்கள் இதை “மிகவும் ஒழுக்கமற்ற மற்றும் மனிதநேயம் இன்றிய செயல்” என்று கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த சர்ஜண்ட் மீது எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஸ்விஸ் இராணுவம் இந்த வீடியோ குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வேகமாகப் பரவி, விலங்குகளின் நலனை மீறிய செயலாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஸ்விட்சர்லாந்தில் விலங்குகள் மீதான கொடுமைச் செயல்கள் கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவை. இதனால், இந்த சம்பவம் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என மனிதநேய அமைப்புகள் நம்புகின்றன.
© WRS