வளி மாசடைதல் காரணமாக நீரிழிவு ஏற்படும்: சுவிஸ் ஆய்வு
சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் வளி மாசடைதல்களினால் நீரிழிவு மற்றும் உடலின் எடை அதிகரிப்பு போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
இதுவரை வளியுடன் கலந்துள்ள நுண்துகள்கள் இதயம் மற்றும் நுரையீரல் மீது தீங்கிழைக்கும் என்று தெரிந்திருந்தது. ஆனால் அவை உடலின் மாற்றுச் செயற்பாட்டையும் பாதித்து, கொழுப்பு சேர்வும் இன்சுலின் எதிர்ப்பும் ஏற்படுத்துகின்றன என்பது இதுவரை தெரியாத உண்மை.
இந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பை சூரிச் பல்கலைக்கழகம் மற்றும் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்லேஷனல் மற்றும் பரிசோதனை இதயவியல் மையத்தின் பேராசிரியர் பிரான்செஸ்கோ பனேனிமற்றும் அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் ராஜகோபாலன் தலைமையில் நடத்திய புதிய ஆய்வு வெளிச்சமிட்டுள்ளது.
ஆய்வாளர்கள் எலிகளை PM2.5 எனப்படும் மிக நுண்ணிய துகள்களுக்கு தினமும் ஆறு மணி நேரம், வாரத்திற்கு ஐந்து நாட்கள் என மனிதர்களின் நகர வாழ்க்கை மாசுக்குத் தகுந்தபடி வெளிப்படுத்தினர்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்யவும், கலோரி எரிக்கவும் உதவும் பழுப்பு கொழுப்பு திசு ஆய்வு செய்யப்பட்டது. அதில், நுண்துகள்களுக்கு உட்பட்ட எலிகளில் அதிக கொழுப்பு சேர்வு மற்றும் நீரிழிவு அறிகுறிகள் காணப்பட்டன.
‘உடல் வெப்பம் உற்பத்தி, கொழுப்பு சிதைவு, ஆக்சிடேட்டிவ் அழுத்த மேலாண்மை போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் மரபணுக்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக கொழுப்பு சேர்வு, திசு சேதம் மற்றும் இணைப்புத் திசு பெருக்கம் ஏற்பட்டது’ என பனேனி தெரிவித்துள்ளார்.
ஆய்வில் HDAC9 மற்றும் KDM2B எனும் இரண்டு என்சைம்கள் முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது. “இரண்டையும் கட்டுப்படுத்தியபோது brown fat செயல்பாடு மேம்பட்டது; ஆனால் அவற்றின் செயற்பாட்டை அதிகரித்தபோது, சாதாரண கொழுப்பு சிதைவு குறைந்தது,” என பனேனி கூறியுள்ளார்.
இந்த ஆய்வு PM2.5 போன்ற சுற்றுச்சூழல் மாசுபாட்டுகள் அதிக எடை மற்றும் வகை 2 நீரிழிவு (Type 2 Diabetes) நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், புதிய சிகிச்சை அல்லது தடுப்பு வழிகளுக்கும் வாய்ப்பு இருப்பதை இது காட்டுகிறது.
எங்கள் முடிவுகள் சுற்றுச்சூழல் மாசுபாடு எப்படி இன்சுலின் எதிர்ப்பையும் மாற்றுச் செயற்பாட்டு கோளாறுகளையும் உருவாக்குகிறது என்பதையும், அதனைத் தடுக்கும் புதிய வழிமுறைகளையும் விளக்குகின்றன என பனேனி குறிப்பிட்டுள்ளது.