சுவிட்சர்லாந்தில் மே 1 முதல் புதிய மாற்றங்கள் அமலில்
சுவிட்சர்லாந்தில் மே 1 முதல் பல முக்கியமான புதிய நடவடிக்கைகள் அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக குடும்ப வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு உதவியாக புதிய அவசர தொலைபேசி எண் அறிமுகமாகுவதும், முட்டை இறக்குமதி அளவு அதிகரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கவை.
குடும்ப வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு உதவியாக 142 என்ற அவசர உதவி எண் மே 1 முதல் செயல்படத் தொடங்கும். இது 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை, 2025 நவம்பரில் கூட்டாட்சி அமைச்சர் Elisabeth Baume-Schneider தொடங்கிய “வன்முறையை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்” என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்திற்கான கூட்டாட்சி அலுவலகம், கன்டோன்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மற்றொரு முக்கிய மாற்றமாக, நாட்டில் அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க முட்டை இறக்குமதி அளவு பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சுங்கக் கோட்டா 15,000 டன்னுகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 36,000 டன்னுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டின் இறுதி வரை சுமார் 240 மில்லியன் கூடுதல் முட்டைகளை குறைந்த வரி விகிதத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதேபோல், உருளைக்கிழங்கு இறக்குமதிக்கும் கூடுதலாக 10,000 டன்னுகள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோட்டல் மற்றும் உணவக துறைக்கான தேசிய கூட்டு தொழில் ஒப்பந்தம் மே 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட முழுநேர பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயிற்சி இல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக 3,713 ஃப்ராங்கும், தொழில்முறை சான்றிதழ் பெற்றவர்களுக்கு 5,293 ஃப்ராங்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 34,000 நிறுவனங்கள் மற்றும் 270,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ளனர். இந்த ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டின் இறுதி வரை செல்லுபடியாகும்.