சுவிட்சர்லாந்தில் இனவெறி புகார்கள் உயர்வு
சுவிட்சர்லாந்தில் இனவெறி சம்பவங்கள் குறையாமல் தொடர்ந்தும் அதிக அளவில் பதிவாகி வருகின்றன. 2025ஆம் ஆண்டில் 1245 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாகும். 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட 40 சதவீத உயர்வுக்குப் பிறகு, இப்போது இந்த எண்ணிக்கை உயர்ந்த நிலையிலேயே நிலைத்துள்ளது.
இந்த எண்ணிக்கைகள் உண்மையான நிலைமையின் ஒரு பகுதி மட்டுமே என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இனவெறி பலரின் தினசரி வாழ்க்கையிலும் நீண்டகாலமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்சினையாக உள்ளது. அதேவேளை, ஆலோசனை மையங்களுக்கு தேவையான ஆதரவு அதிகரிக்கப்படாததால் அவை அழுத்தத்தில் செயல்படுகின்றன.

கல்வித்துறையில்தான் அதிகமான சம்பவங்கள் (22%) இடம்பெற்றுள்ளன. வேலைத்தளங்களில் 17% சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறி 33% ஆகவும், வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பு 30% ஆகவும், முஸ்லிம்களுக்கு எதிரானது 23% ஆகவும் உள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் இனவெறி அவமதிப்புகள் (25%) மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் (15%) ஆகும். குறிப்பாக முஸ்லிம் எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பலர் புகார் அளிக்காமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில், இனவெறி சம்பவங்கள் குறைவடையவில்லை என்பதையும், இந்த பிரச்சினையை சமாளிக்க கூடுதல் கவனம் தேவைப்படுகின்றதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.