புலம்பெயர்வு விவகாரம்: சுவிட்சர்லாந்தில் தீவிர அரசியல் விவாதம்
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்வு தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகை 10 மில்லியனை தாண்டக்கூடாது என்ற நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள “No to 10 Million Switzerland” என்ற பிரேரணை தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புலம்பெயர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் Swiss People’s Party இந்த பிரேரணையை முன்வைத்துள்ளது. புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு குறித்து ஜூன் 14ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த பிரேரணை சுவிட்சர்லாந்து அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சமீபத்திய ஆய்வுகள் புலம்பெயர்வு குறைந்தால் நாட்டில் ஏற்கனவே அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையும் குறைந்து வரும் பிறப்பு வீதமும் சேர்ந்து கடும் பணியாளர் பற்றாக்குறையை உருவாக்கும் என எச்சரிக்கின்றன.
குறிப்பாக மருத்துவம், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகள் அதிகமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துறைகள் தற்போது பெரிதும் வெளிநாட்டு பணியாளர்களை சார்ந்துள்ளன.

மேலும், சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெளியிட்ட தரவுகளின்படி, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், உள்ளூர் மக்களைவிட சராசரியாக ஏழு ஆண்டுகள் இளையவர்கள். அவர்கள் பெரும்பாலும் வேலை செய்யும் வயதிலேயே இருப்பதால், தொழில்துறையின் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றுகின்றனர்.
நாட்டில் ஓய்வு பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் இல்லாமல் போனால் ஓய்வூதியம் மற்றும் முதியோர் சுகாதார சேவைகளுக்கான செலவுகள் அரசுக்கு அதிக சுமையாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சூழலில், அந்த “No to 10 Million Switzerland” பிரேரணைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என அரசு பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக அமைப்பையும் நிலைநிறுத்த புலம்பெயர்வு அவசியம் என்ற கருத்து அரசியல் மற்றும் ஊடகங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகிறது.
இதனால், இந்த பிரேரணையைச் சுற்றியுள்ள விவாதங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.