ஜெனீவாவில் கடிகார சேகரிப்பாளர் மீது கொடூர தாக்குதல்
சுவிட்சர்லாந்தின் Geneva நகரில், கடிகாரங்களை சேகரிக்கும் பழக்கமுள்ள 87 வயதுடைய முதியவர் ஒருவர் கடுமையான தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
கடந்த வாரம் Rue des Alpes பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் பாரிலிருந்து வெளியேறிய பின்னர் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த முதியவரின் கைக்கடிகாரத்தை பறிக்க முயன்ற தாக்குதலாளர், அவரை பல முறை குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த காவல்துறை ரோந்து குழு உடனடியாக தலையிட்டு சந்தேக நபரை கைது செய்தது. காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல், உலகப் புகழ்பெற்ற Watches and Wonders கண்காட்சி நடைபெற்று கொண்டிருக்கும் காலத்தில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும், இந்த நிகழ்வுடன் தொடர்புடைய வகையில் கடிகார திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா நகரம் உலகளவில் உயர்தர கடிகாரங்களுக்குப் பெயர் பெற்றது. அதனால் இவ்வாறான தாக்குதல்கள் பொதுமக்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. காவல்துறை, குறிப்பாக உயர்ந்த மதிப்புள்ள பொருட்களை வைத்திருப்போர் அதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.