ஆன்லைன் வீட்டு வாடகை மோசடிகள் அதிகரிப்பு – போலீஸ் எச்சரிக்கை
இணையத்தின் மூலம் வீடு தேடும் மக்களை குறிவைத்து நடக்கும் வாடகை மோசடிகள் நாளுக்கு நாள் மேம்பட்ட முறையில் நடைபெற்று வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடி குழுக்கள் நம்பகமான இணைய தளங்களில் கவர்ச்சிகரமான வீட்டு விளம்பரங்களை வெளியிட்டு, பின்னர் ஆர்வமுள்ளவர்களை WhatsApp போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு மாற்றுகின்றனர். அங்கு போலியான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டு, அடையாள ஆவணங்கள், வங்கி தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன.

இந்த தகவல்கள் பின்னர் அடையாள திருட்டு அல்லது மோசடி பொருட்கள் வாங்குதல் போன்ற குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று Federal Cybercrime Office தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வீட்டு வசதி குறைவாக இருப்பதால், விரைவாக வீடு பிடிக்க வேண்டும் என்ற அவசரம் பலரை இப்படியான மோசடிகளுக்கு எளிதில் இரையாக மாற்றுகிறது. இதை பயன்படுத்தியே குற்றவாளிகள் நுட்பமான முறையில் செயல்படுகின்றனர்.
இதனால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர். இணையத்தில் தெரியாத நபர்களுக்கு தனிப்பட்ட ஆவணங்களை பகிர வேண்டாம், வீடு அல்லது முகவர் பற்றிய தகவல்களை சரிபார்க்காமல் எந்த விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டாம் என்பதும் முக்கிய ஆலோசனைகளாக வழங்கப்பட்டுள்ளது.