குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் உள்ள ஆபத்தான ரசாயனங்களைத் தடுக்க சுவிஸ் புதிய நடவடிக்கை
சுவிட்சர்லாந்து, குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்களில் உள்ள ஆபத்தான ரசாயனங்களிலிருந்து சிறு குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்ட மாற்றத்துக்குத் தீர்மானித்துள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் நாடாளுமன்ற முன்மொழிவுக்கு கூட்டாட்சி அரசு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், மனித உடலில் நீண்ட காலம் தங்கியிருந்து தீவிர உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் PFAS எனப்படும் ரசாயனங்களை 2030க்குள் விளையாட்டு பொருட்களில் முழுமையாகத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரலில், ஐரோப்பிய பாராளுமன்றம், உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து, இந்தத் தடை நடவடிக்கையை உள்ளடக்கும் புதிய விதிமுறைக்கான ஒப்பந்தத்தை எட்டின.

இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் தனது தற்போதைய விளையாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, PFAS கலந்திருக்கும் விளையாட்டு பொருட்களை 2030ஆம் ஆண்டுக்குள் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கத் திட்டமிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் அவசியம் என அரசு கருதுகிறது.
PFAS வகை ரசாயனங்கள் நீர்ப்புகா பூச்சுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நுகர்வோர் உபயோகப் பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை சுற்றுச்சூழலில் கரையாமல் நீண்ட காலம் சேர்ந்து, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் வளர்ச்சி மீது தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதால் பல நாடுகள் இவற்றை கட்டுப்படுத்த வேகமாக முன்னேறி வருகின்றன.
சுவிட்சர்லாந்தின் புதிய முயற்சி, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சர்வதேச முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்ற மதிப்பீடு நிபுணர்களிடையே எழுந்துள்ளது.