ஐரோப்பாவின் ‘மோசமான’ உணவுகளில் சுவிஸ் நாட்டின் சூப் தெரிவு.!!
ஐரோப்பாவின் 100 மோசமான உணவுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ள TasteAtlas, அதில் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய (swiss hay soup) ‘ஹே சூப் உள்ளடங்குவதாக குறிப்பிடுகிறது. இந்த பட்டியல் உணவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இந்த சூப் சுவிஸ் ஆல்ப்ஸ் மலை குடில்களில் தலைமுறைகளாக சமைக்கப்படும் உணவுகளில் ஒன்றாகும்.
பாரம்பரியமாக, கோடை காலத்தில் புல் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த ஆல்ப்ஸ் மலைப்பகுதி மக்கள் இந்த சூப்பை அருந்துவர். வெட்டப்பட்ட பசும்புல் சூப்பின் நீரில் ஊறவைத்து, புல்வெளியின் இயற்கையான மணத்தை உணவிற்கு சேர்க்கும் விதமாக இதை தயாரிப்பார்கள். க்ரீம், வெள்ளை வைன், மூலிகைகள், மசாலா ஆகியவற்றுடன் சமைக்கப்படும் இந்த உணவு பலருக்கு புதுமையான அனுபவமாக இருக்கும்.

TasteAtlas இதைப் பற்றிக் குறிப்பிட்டபோது, “இந்த சூப்பின் சுவை ஒரு பழகிக் கொள்ள வேண்டிய வகை. முதலில் சிறிய இனிப்பு, பின்னர் க்ரீமி தன்மை, அதன் பிறகு சற்றே புளிப்பு நிறைந்த சுவை வாயில் புலப்படும்” என்று விவரிக்கிறது.
சமையல் வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த இந்த சூப் சுவிட்சர்லாந்தின் கிராமப்புற உணவு கலாசாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், நவீன உணவுப் பார்வையில் அது அனைவருக்கும் பொருந்தக்கூடிய சுவை அல்ல. அதனால் தான் ஐரோப்பாவின் ‘குறைந்த மதிப்பீடு பெற்ற’ பட்டியலில் இடம் பெற்றுள்ளது என சமையல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
© KeystoneSDA