பயன்பாடில்லா ஆடைகளால் மூழ்கும் ஸ்விட்சர்லாந்து – புதிய நடமுறை உருவாக்க திட்டம்
ஸ்விட்சர்லாந்தில் பயன்பாடில்லாத ஆடைகள் பெருகி சுற்றுச்சூழல் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், அதனை சமாளிக்க முக்கியமான மாற்றங்கள் தொடங்கியுள்ளன. சூரிக் நகரம் 2027க்குள் அனைத்து பழைய ஆடைகளையும் — சேதமடைந்தவைகளும் உட்பட — நாட்டுக்குள் மறுசுழற்சி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனால், தற்போதுள்ளபடி வெளிநாடுகளுக்கு சேமிக்கப்பட்ட பழைய ஆடைகள் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்படும்.
இந்த முயற்சியை பாசல் மற்றும் பெர்ன் நகராட்சிகளும் விரைவில் பின்பற்றும் வாய்ப்புள்ளது. ஸ்விட்சர்லாந்தின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள செயின்ட் மார்க்ரெதனில், டெல்-டெக்ஸ் (Tell-Tex) என்ற நிறுவனம் நாட்டின் முதல் பெரிய அளவிலான துணி மறுசுழற்சி ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதன் நிதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், Fabric Loop எனப்படும் ஒரு புதிய திட்டம், ஒவ்வொரு புதிய ஆடைக்கும் சிறிய அளவிலான மறுசுழற்சி கட்டணத்தை (recycling fee) விதிக்க முன்மொழிந்துள்ளது. இது தற்போது PET பாட்டில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மறுசுழற்சி கட்டண முறைபோல இருக்கும்.

மத்திய நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. பசுமைக் கட்சி (Greens) வேகமான ஆடை உற்பத்தி முறை (fast fashion) மீது கட்டுப்பாடு விதித்து, நீண்ட காலம் பயன்படக்கூடிய ஆடைகள் உருவாக்க சட்டமூலங்களை முன்வைத்துள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஸ்விட்சர்லாந்தில் சுமார் 100,000 டன் ஆடைகள் சேகரிக்கப்படுகிறது.. அதில் ஒரு பகுதி மட்டுமே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது; மீதியெல்லாம் வெளிநாடுகளுக்குச் அனுப்பப்படுகிறது. அல்லது எரிக்கப்படுகிறது. எனவே, உள்ளூரிலேயே முழுமையான மறுசுழற்சி அமைப்பை உருவாக்கும் சூரிக்கின் திட்டம், நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கையில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், ஸ்விட்சர்லாந்து ஆடை கழிவுகளைச் சமாளிக்கும் முன்னோடி நாடாக மாறி, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு புதிய மாதிரியை உருவாக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
© Keystone SDA