சுவிஸ் கடிகார அமைப்பு 1.5 டன் போலி கடிகாரங்களை அழித்தது
சுவிட்சர்லாந்தின் பெர்ன் அருகிலுள்ள Köniz பகுதியில் வெள்ளிக்கிழமை, சுவிஸ் கடிகார தொழில் சம்மேளனம் (FH) சுமார் 1.5 டன் போலி கடிகாரங்களை அழித்தது. இதில் சுமார் 7,500 போலி “Swiss Made” கடிகாரங்கள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 2019 முதல் 2025 வரை சுவிஸ் சுங்கத்துறையால் நாட்டிற்குள் வரும்போது பறிமுதல் செய்யப்பட்டவையாகும். இது சுவிஸ் கடிகார தொழில் சம்மேளனம் இதுவரை மேற்கொண்ட மிகப் பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சுவிஸ் கடிகார தொழில் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், போலி பொருட்கள் வாங்குவது சுற்றுச்சூழலுக்கும் நெறிமுறைக்கும் எதிரான செயல் எனவும், இது நேரடியாக குற்றவியல் அமைப்புகளை ஆதரிக்கிறது எனவும் எச்சரித்துள்ளது.
சமீப ஆண்டுகளில், குறிப்பாக கொவிட்-19 பரவலுக்குப் பிறகு ஆன்லைன் விற்பனை பெரிதும் அதிகரித்ததால், சிறிய பார்சல்கள் வழியாக போலி பொருட்கள் அனுப்பப்படுவது பெருகி வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தினமும் சுமார் 12 மில்லியன் பார்சல்கள் அனுப்பப்பட்டதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

சுவிஸ் தயாரிப்புகளின் புகழும் விலையும் காரணமாக அவை போலி தயாரிப்பாளர்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளன. 2020–2021 ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்களில் 87 சதவீதம் சுவிஸ் கடிகாரங்களே என சுவிஸ் கடிகார தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பொருட்கள் வாங்குவது சட்டவிரோதம்; பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அழிப்பு செலவையும் வாங்குபவர் ஏற்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கும் 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதற்கான முக்கியக் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுவிஸ் கடிகார தொழில் சம்மேளன தலைவர் ஈவ்ஸ் புக்மேன் எச்சரித்ததாவது, போலி கடிகாரங்கள் சுவிஸ் தொழில்துறையின் புதுமை மற்றும் வேலைவாய்ப்புகளை ஆபத்துக்குள்ளாக்குகின்றன. தரமற்ற தயாரிப்புகள் சுவிஸ் பிராண்டுகளின் நற்பெயருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வரை சுவிஸ் கடிகார மற்றும் நகைத் துறையில் வேலை இழக்கின்றனர் என்று சுவிஸ் கடிகார தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
© KeystoneSDA