சுவிஸில் இறெயின்தாளர் தமிழ்மன்றத்தின் 33ஆவது ஆண்டு விழா நிகழ்வு – 2025
சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத்தில் இயங்கிவரும் “இறெயின்தாளர் தமிழ் மன்றம்”தனது 33ஆவது ஆண்டு விழா நிகழ்வை கடந்த 20.09.2025 சனிக்கிழமையன்று Rhaeinusall, St.Margrethen எனுமிடத்தில் பிற்பகல் 15:30 மணிமுதல் நள்ளிரவு வரை வெகு சிறப்பாக நடாத்தியது…
சம்பிரதாயபூர்வமான மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வைத் தொடர்ந்து விழாச்சுடரினை செங்காளன் மாநிலம், சர்க்கான்ஸ் தமிழ்மன்ற இளைய தலைமுறை நிர்வாக உறுப்பினர்கள் ஏற்றிவைத்தனர். பொது ஈகச்சுடரினை து.திலக்(கிரி) ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேவாரம்,தமிழ்மொழி வாழ்த்து பாடல், அகவணக்கம் என்பன இடம்பெற்று அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது…..
வரவேற்புரையினை மன்றத்தலைவி செல்வி தமிழினி விநாயகமூர்த்தி, செயலாளர் செல்வன் லிங்கேஸ்வரன் கேசவன் ஆகியோர் நிகழ்த்தினர். ஆசியுரையினை சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயப் பிரதம குரு வழங்கினார். தொடர்ந்து இளைய தலைமுறையினரின் கலைநிகழ்வுகள்,வைத்திய முதலூதவி ஆலோசனைகள், சமூகநல உதவி அமைப்புக்களின் இலவச கருத்துரைகள், பாடல்கள், கவிதை, இசையுடன் கூடிய நடனம் என அரங்கை முற்றுமுழுதாக இளைய தலைமுறைப்பிள்ளைகள் ஆழுகைக்குள் வைத்திருந்தார்கள். பெரும் ஆர்வத்தோடு பெற்றோர்கள், பலபகுதிகளிலும் இருந்து வருகைதந்த ஈழத்து உறவுகள் என விழா மண்டபம் நிறைந்திருந்தது.

கருத்துரைகளை இறெயின்தாளர் வாழ் திரு.ஜெகதீஸ்வரன், திரு.பூ.உதயன், திரு.எஸ்.தவம் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்புரையினை “ஏர் நிலம்” தொண்டமைப்பு நிறுவுநர் திரு.து.திலக்(கிரி) ஆற்றினார். தொடர்ந்து கலை நிகழ்வுகளில் பங்காற்றிய அனைவருக்கும் இறெயின்தாளர் தமிழ்மன்ற உறுப்பினர்களான செல்வன் அருந்தவராசா சங்கீத், செல்வன் லிங்கேஸ்வரன் சாரங்கன், செல்வி சர்ஜனா சந்திரமோகன், செல்வன் யோகநாதன் ஆதித்தன் ஆகியோர் சிறப்புப் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தனர்..
இறெயின்தாளர் தமிழ்மன்ற நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் சுவிற்சர்லாந்து நாட்டில் பிறந்த இளைய தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகள். இவர்கள் இவ் நிர்வாகத்தை சுழற்ச்சி முறையில் இளையவர்களே ஏழு வருடங்களாக நடாத்தி வருகிறார்கள் என்பதும் சிறப்பம்சமாகும்.
இவர்கள் தாயகத்தில் வறுமை நிலையில் வாழும் மாணவர்களை இனங்கண்டு “ஏர் நிலம்” தொண்டமைப்பு ஊடாக பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவருகிறார்கள். தொடராக பாடசாலை வகுப்பறைப் புனரமைப்பு, மாலைநேர கல்விக்கூடம் அமைத்துக் கொடுத்தல், கல்விசார் உதவிகள், உணவு வழங்கல் என தொடராக வழங்கி வரும் தமிழ்மன்றம்
இவ்வருடமும் தாயகச் சிந்தனையோடு தங்கள் நிகழ்வு நாளன்று கிளி.தர்மபுரம் பகுதியில் முதியோர் பகல் பராமரிப்பு இல்லம், கிராமசேவகர் அலுவலக உதவி நாடிவரும் மக்கள், தனியார் கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் அயலவர்கள் பயன்பெறும் வகையில் 300,000/=(மூன்று இலட்சம்) பெறுமதியான செலவில் குடிநீர் வசதியை முழுமையும் ஏற்பாடு செய்து வழங்கினர். இவ்வாறான தாயகம் நோக்கிய பணிகளை இளைய தலைமுறைப் பிள்ளைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது…
இரவு உணவுப் பரிமாறல்களோடு தொடர் கலைநிகழ்வுகளுடன் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது அரங்க நிகழ்வுகளை சர்கான்ஸ் வாழ் செல்வன் இராஜேஸ்வரன் ஆகாஸ் தொகுத்து வழங்கினார் நன்றியுரையை நிர்வாகப் பிள்ளைகள் இணைந்து வழங்க இனிதே நிறைவுபெற்றது.
செய்தி:-
து.திலக்(கிரி)