பொது போக்குவரத்து பேருந்துடன் மோதி கார் விபத்து – மூவர் காயம்
சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபூர்க் கண்டோனில் உள்ள வில்லாஸ்-செயின்ட்-பியெர்ரே மற்றும் ரோமோன்ட் இடையே இன்று காலை கடுமையான சாலை விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கார் மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்து மோதியதில் மூவர் காயமடைந்தனர்.
இது பற்றி கன்டோன் போலீசார் தெரிவிக்கையில், காலை சுமார் 7.30 மணியளவில் ஃப்ரிபூர்க்-லுச்சி சாலையில் இந்த விபத்து நடந்தது. 20 வயது இளைஞர் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டிருந்தபோது, இன்னும் காரணம் தெளிவாகாத நிலையில் அவர் திடீரென இடதுபுறம் மாறி எதிரே வந்த பேருந்தை நேருக்கு நேர் மோதி உள்ளார்.

காரில் இருந்த 20, 21 மற்றும் 22 வயதுடைய மூவரும் காயமடைந்து உடனடியாக மருத்துவ உதவி பெற்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தை ஓட்டி வந்த 49 வயதான டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் எவரும் இல்லை.
விசாரணையில், கார் ஓட்டிய இளைஞர் தற்காலிக உரிமம் (learner’s permit) பெற்றிருந்ததும், மது அருந்திய நிலையில் வாகனம் இயக்கியதும் தெரியவந்தது. மேலும், அவர் அருகில் இருந்த 22 வயது நண்பருக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாததால் சட்டப்படி தேவையான “தகுதியான வழிகாட்டி” இன்றி பயணம் செய்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்படவுள்ளது.
மூன்று மணி நேரத்திற்கு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மீட்பு பணிகள் மற்றும் சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்து, அனுபவமற்ற ஓட்டுநர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
© Kapo FR