சூரிச்சில் டிராமில் பெண் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
சூரிச் நகரத்தில் கடந்த வார இறுதியில் டிராமில் பெண் பயணியொருவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். நகர போலீஸ் வெளியிட்ட தகவலின்படி, 28 வயதான சிரிய நாட்டு நபர் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாலை நடந்தது. அப்போது டிராமில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீர் தாக்குதலுக்குள்ளானதாகவும், உடனடியாக போலீசாரை தொடர்புகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அன்றைய தினம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்ல முடியாததால் விமர்சனங்கள் எழுந்தன.
அதே நேரத்தில் சூரிச் முழுவதும் பல்வேறு பெரும் அவசரச் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடந்தைமையால் சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை என போலீஸ் விளக்கமளித்துள்ளது. குறிப்பாக, இடதுசாரி செயற்பாட்டாளர்களின் திடீர் ஆக்கிரமிப்பு முயற்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், மேலும் காயங்களுடன் கூடிய மூன்று சாலை விபத்துகள் ஆகியவற்றால் நகர போலீஸ் படையணி முழுவதும் பணி நெருக்கடியில் இருந்ததாக தெரிவித்தனர்.

இதனால் சம்பவ இடத்துக்குத் தேவையான படைகளை அனுப்ப இயலாமல் போனது. சம்பவத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நகர போலீஸ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி, வார இறுதிகளில் பல்வேறு அவசரச் சம்பவங்கள் ஒரே நேரத்தில் குவிவதால் சில நேரங்களில் இப்படியான தற்காலிக சிரமங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சூரிச் போன்ற நகரங்களில் டிராம்கள் பொதுப் போக்குவரத்தின் முக்கியக் கண்ணியாக இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் அவசியமென பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© Kapo ZH