சுவிஸுக்கு நுழைவு தடை இருந்தும் திருடப்பட்ட கடிகாரங்களுடன் எல்லையில் ஒருவர் கைது
சுவிட்சர்லாந்தின் துர்காவ் கண்டோனில் உள்ள க்ராய்ஸ்லிங்கன் எல்லைப் பகுதியில், சுங்கத்துறையின் மொபைல் ரோந்து குழு சமீபத்தில் சந்தேகத்துக்கிடமான ஒருவரை தடுத்து நிறுத்தியது. ஜெர்மனியில் இருந்து இ-ஸ்கூட்டரில் வந்திருந்த அந்த நபர், சுவிஸில் நுழைய 2035 வரை செல்லுபடியாகும் நுழைவு தடை விதிக்கப்பட்டிருந்தார்.
சுங்கச் சோதனையின் போது, அவரிடம் இருந்த மூட்டையில் 213 கைக்கடிகாரங்கள் மற்றும் பாக்கெட் வாட்ச்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் திருடப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

துர்காவ் கண்டோன் காவல்துறைக்கு, கைதான 41 வயதான நபரும், பறிமுதல் செய்யப்பட்ட சந்தேகப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுங்கத்துறையினரும் காவல்துறையும் இணைந்து, கடிகாரங்களின் மூலமும், சர்வதேச திருட்டு வலையமைப்புகளுடனான தொடர்பும் குறித்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
@Kapo TG