சுவிஸ் விமான விபத்து குறித்து விசாரணை
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட Swiss International Air Lines (SWISS) விமானத்தில் ஒரு விமான பணியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது அந்த விபத்து தொடர்பான விசாரணையை சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வமாக மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா போக்குவரத்து அமைச்சும் சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியமும் (SUST) இதனை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளன.
விமான விபத்துகள் வழக்கமாக நிகழும் நாட்டிலேயே விசாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த விசாரணையை ஆஸ்திரியா ஏற்க முடியாத சூழ்நிலை உருவானது. விசாரணை நடத்தும் ஆஸ்திரியா பாதுகாப்பு விசாரணை வாரியத்தில் (SUB) சில ஊழியர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டதால், பாகுபாடு குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கும் நோக்கில் SUB நிறுவனம் பொறுப்பை சுவிட்சர்லாந்திடம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியம் இந்த விசாரணையை முழுமையாக மேற்கொள்வதை ஒப்புக்கொண்டுள்ளது.
2024 டிசம்பர் 23 அன்று, ஹங்கேரியின் புக்கரெஸ்ட் நகரிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி புறப்பட்ட SWISS நிறுவனத்தின் Airbus A220 விமானம், இயந்திரக்கோளாறு மற்றும் விமானத்தின் உள்பகுதியில் புகை ஏற்பட்டதைக் காரணமாகக் கொண்டு ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 74 பயணிகளும் 5 பணியாளர்களும் இதில் பாதிக்கப்பட்டனர். பலர் காயமடைந்தனர்; இவர்களில் சிலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். விமான பணியாளராக இருந்த 23 வயதான இளைஞர், தொடர்ந்து சிகிச்சை பெற்றபோதும், பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.