சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வார இறுதியில் இருந்து கடுமையான புயல் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. டெசினோவில் பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
ஆற்றின் அருகே உள்ள வீடுகளில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தது. கன்டோன் வலாய்சும் பெருந்திரளான தண்ணீருடன் அசாதாரண நிலமையை எதிர்நோக்கியிருந்தது
மகியா போன்ற சில டெசினோ பள்ளத்தாக்குகள் குறிப்பாக பாரியளவில் பாதிக்கப்பட்டன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து உயரமான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆதாரம் : கீஸ்டோன் / மைக்கேல் புஹோல்சர்
மேலும் டெசினோவின் சில பகுதிகளில், அசுத்தமான குடிநீர் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த நேரத்தில் குழாய் நீரை உட்கொள்ளக்கூடாது எனவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
புயல் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். கிராவுண்டனில் கடந்தவாரம் இரண்டு பேரும், டெசினோவில் ஐந்து பேரும் மற்றும் வலாய்ஸில் ஒருவரும் பலியாகியிருந்தனர். மூன்று மண்டலங்களிலும் புதன்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் ஆறு பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மகியா பள்ளத்தாக்கில் இருந்து மற்றொரு உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
கன்டோனல் பொலீசார், மீட்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரை அடையாளம் காணும் பணிகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
புயல் காரணமாக டெசினோ மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.