இயற்கையின் ஒத்துழைப்போடு இனிதே இடம்பெற்ற TamilFest 2024 நிகழ்வு சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் கன்டோனில் ROthrist நகரில் 29/6/2024 அன்று StarOfeelam பெருமையுடன் வழங்கிய TamilFest 2024 நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, முட்டி உடைத்தல், சிலம்பம் போன்றவையுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் நாவிற்கு சுவையான தமிழர் உணவுகளின் விற்பனை களைகட்டியிருந்தது. தமிழர்கள் மாத்திரம் இன்றி சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்களும் எம்மவர் நிகழ்வுகளை ஆர்வமாக கண்டுகளித்ததோடு தமிழர் உணவுகளையும் ரசித்து புசித்ததை காணக்கூடியதாக இருந்தது.
TamilFest 2024
குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளாரான சசி அவர்கள் இந்நிகழ்வு பற்றி குறிப்பிடுகையில் முதல் முறையாக தான் நடாத்திய இந்நிகழ்வுக்கு இவ்வளவு பேர் ஆதரவு தருவார்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை. தமிழர் அல்லாதவர்களும் எமது பாரம்பரிய நிகழ்வுகளை காண வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குறிப்பிட்ட நாளில் சுவிட்சர்லாந்தில் பல்வேறு இடங்களில் தமிழர் சார்ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதும் தனது கன்னி முயற்சிக்கு பெரும்பான்மையானோர் ஆதரவு தந்தமை வரவேற்கத்தக்கது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது மாத்திரமின்றி குறித்த நிகழ்வில் அன்றை தினம் இடம்பெற்ற சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கிடையிலான காற்பந்து போட்டிகள் பெருந்திரையில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டிருந்தமை இன்னும் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் பல்வேறு மாகாணங்களிலும் காலநிலை தொடர்பாக பல எச்சரிக்கை செய்திகள் வந்தபோதும் அன்றைய தினம் இயற்கையின் பூரண ஒத்துழைப்புடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.