சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டிருந்த கடுமையான காலநிலையில் இருந்து சில ஓரிரு வெயில் நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இந்த வார இறுதியில் அதிக இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அதிக வெயில் நிலவும் எனவும் சுவிஸ் பெடரல் வானிலை சேவை தெரிவித்துள்ளது .

இருப்பினும், சனிக்கிழமைக்கு பின்னர் அதிக புயல் மற்றும் ஆலங்கட்டி மழை கூட ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெனீவா, வாட், நியூசெட்டல், ஜூரா, பாஸல்-சிட்டி, பாசல்-லேண்ட் மற்றும் பெர்னின் வடமேற்கு பகுதிகளில் அபாயகரமான புயல் நிலைகள் அதிகமாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேர்ன், டெசினோ, லூசேர்ன், ஆர்காவ், அப்பென்செல் ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளில் புயல்கள் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்பைன் பகுதிகள் மழை, இடி மற்றும் மின்னலினால் அதிகம் பாதிக்கப்படும் எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களாக சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததை அடுத்து இந்த முன்னறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.