சுவிஸ் வான் பரப்பில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள்!! பாதுகாப்பு அதி தீவிரம் நிட்வால்டனில் இந்த வார இறுதியில் இடம்பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டுக்கு மேலே பறப்பதை தாங்கள் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
போர்ச்சுகல் மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற விமானப்படைகளின் விமானங்கள் சூரிச் விமான நிலையத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புத் துறை பாதுகாப்பு பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மாநாட்டில் ஈடுபட்டுள்ள அரசு இணையதளங்களில் பல்வேறு இணையத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக சைபர் செக்யூரிட்டி மையம் கூறுகிறது. மேலும் சைபர் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆனால் அவை சிறிய பிரச்சனைகளுக்கு மட்டுமே வழிவகுத்தன எனவும் பாரிய பிரச்சினைகள் எதுவும் அதனால் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகள் உக்ரைனின் நிலைமையை முக்கியமாக விவாதிக்க குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சி நிரலில் ஏனைய தலைப்புகளும் இருக்கும் என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
இந்நிலையில் மாநாடு இடம்பெற இருக்கும் பகுதியை சுற்றி பாதுகாப்பு வலயமாக அதி தீவிர கண்காணிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.