நேற்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு விபத்தில் இரண்டு குளிர்கால விளையாட்டு ஆர்வலர்கள் பலியாகியுள்ளனர்.
காலை 7:30 மணியளவில் பனிச்சறுக்கு மேற்கொள்ளும் நபர்கள் Matterhorn – Grand Combin இடையில் கிட்டத்தட்ட 3,800 மீட்டர் உயரமுள்ள பிக்னே டி அரோலாவின் உச்சியில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பயணித்த மூவரில் இருவர் பல அடி மீற்றர் பள்ளத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டார்கள்.

உடனடியாக மீட்பு பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. பணியாளர்கள் இறந்த இருவரையும் சுமார் 800 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலியானவர்கள் 30 வயது மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும் உயிரிழந்த இருவரையும் முறையாக அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே வேளை கடந்த சனிக்கிழமையும் பனிச்சறுக்கில் ஈடுபட்ட 26 வயதுடைய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 300 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.