Freiburg இல் பயங்கர விபத்து : 30 பேர் படுகாயம் கன்டோன் ப்ரீபர்க்கில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று புதன்கிழமை ப்ரீபர்க் அருகே மேவாகன் என்று அழைக்கப்படும் டிரெய்லர் சம்பந்தப்பட்ட கடுமையான விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஃப்ரீபர்க்கில் உள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்பு ஹெலிகாப்டர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் காயமடைந்திருந்தாலும் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Foto: Gudrun Gehr/Oberbadisches Verlagshaus/dpa
காயமடைந்த 22 பேரின் பெயர்கள் விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிறு காயங்களுடன் சிலர் விபத்து நடந்த இடத்தில் இருந்து போலீசார் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்குள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசாரின் தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குறித்த வாகனத்தில் குழந்தைகள் இருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
குறித்த விபத்து மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாய இயந்திரம் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட டிரெய்லர் இடது புற வளைவில் கவிழ்ந்தது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், விபத்து நடந்தபோது குறித்த வாகனத்தில் பயணித்த குழு அதிக வேகமாக செல்லவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். விபத்து நடந்த இடத்தில் இருந்த சரிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கு இருக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவிக்கிறார்கள்.
மேலும், ஓட்டுநரிடம் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் வாகனத்தில் அளவுக்கு அதிகமானோர் பயணித்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.