சூரிச்சில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பல ஆய்வாளர்களாலும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள மற்ற எல்லாப் பகுதிகளையும் விட சூரிச் மண்டலம் வேகமாக வளரும். 2050 ஆம் ஆண்டில் சூரிச் மாகாணத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வசிப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இது 2020 ஆம் ஆண்டை விட 450,000 அதிகமான குடியிருப்பாளர்களை குறிக்கின்றது. இந்த 28 சதவீத மக்கள்தொகை வளர்ச்சி பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வரும். இது தொடர்பாக இன்று அரசாங்க கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்த மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூலோபாய முடிவுகள் தேவை என குறிப்பிட்டுள்ளது. எனவே ‘வளர்ச்சி 2050’ என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம், தொழிலாளர்கள், வீட்டுவசதி, சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான பெருகிவரும் தேவையை மண்டலம் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் நோக்கம் கொண்டது எனவும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.